இந்தியா

நிர்பயா வழக்கு: 'பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்'; குற்றவாளி முகேஷ் சிங் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதம்: தீர்ப்பு புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு

பிடிஐ

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததற்கு எதிரான வழக்கில் தீர்ப்பை புதன்கிழமைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் " சிறையில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கும், கடுமையாகத் தாக்கப்பட்டேன். தனக்குத் தண்டனைக்குறைப்பு இல்லை" என்று குற்றவாளி முகேஷ் சிங் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுத் தூக்கி வீசப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 17-ம் தேதி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்துள்ளது

இந்நிலையில், குற்றவாளி முகேஷ் சிங் சார்பில் அவரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்தேன். அதையும் அவர் நிராகரித்துவிட்டார். குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்

இந்தமனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ்.போபண்ணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், குற்றவாளி தரப்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆகியோர் ஆஜராகினார்கள்.

குற்றவாளி தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ஏ.பி.சிங் வாதிடுகையில், " குடியரசுத் தலைவரிடம் அனைத்து ஆவணங்களும் அனுப்பப்படவில்லை. குடியரசுத்தலைவர் கருணை மனுவைத் தன்னிச்சையாகவும், தவறான நம்பிக்கையில் நிராகரித்துள்ளார். குற்றவாளி முகேஷ் சிங் சிறையில் தனித்த சிறையில் வைக்கப்படவும் இல்லை, அவருக்குத் தண்டனை குறைப்பும் இல்லை. சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்" என வாதிட்டார்
இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "குடியரசுத் தலைவரிடம் அனைத்து ஆவணங்களையும் உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது. முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடம்தான் இருக்கிறது.

இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணைக்கு மிகக்குறைவான வாய்ப்புதான் இருக்கிறது. கருணை மனு பரிசீலனை செய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தால், அது மனிதநேயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். குடியரசுத் தலைவர் கருணை மனுவைப் பரிசீலிக்கும் விஷயத்தில் மனநிறைவுடனே செயல்பட்டுள்ளார். அனைத்து நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் குடியரசுத் தலைவர் அமர்ந்திருந்து பரிசீலிக்கத் தேவையில்லை" எனத் தெரிவித்தார்

அப்போது குற்றவாளி வழக்கறிஞர் ஏபி.சிங் வாதிடுகையில், " நீங்கள் ஒருவரின் வாழ்க்கையோடு உயிரோடு விளையாடுகிறார்கள், மனதை முழுமையாக செலுத்தி பார்க்கவில்லை" எனத் தெரிவித்தார்

இதற்கு நீதிபதி அசோக் பூஷன் " அப்படியென்றால் குடியரசுத் தலைவர் முழுமையான மனதைச் செலுத்தி ஒவ்வொரு ஆவணத்தையும் பார்த்து முடிவு எடுக்கவில்லை" எனச் சொல்கிறீர்களா. இதுபோன்ற உண்மைகள் குடியரசுத் தலைவர் முன் வைக்கப்படவில்லை என்று எவ்வாறு சொல்கிறீர்கள். குடியரசுத் தலைவர் மனதை முழுமையாகச் செலுத்தி கருணை மனுவைப் பார்க்கவில்லை என்று எப்படிக் கூறுகிறீர்கள்" எனக் கேள்வி எழுப்பினார்.

துஷார் மேத்தா வாதிடுகையில், " குற்றவாளி சிறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினார், தாக்கப்பட்டார் என்ற அடிப்படையில் கருணை கோரவும், தண்டனையைக் குறைக்கக் கேட்க முடியாது. குறிப்பிட்ட காலம் வரை முகேஷ் தனிமைச் சிறையில்தான் இருந்தார். ஒருவேளை உடல்நிலை மோசமான சூழலில் குற்றவாளிக்கு இருந்தால்கூட தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் இருக்கலாம், ஆனால், இதில் குற்றவாளி நல்ல உடல் நிலையில்தானே இருக்கிறார்" எனத் தெரிவித்தார்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு, தீர்ப்பை நாளை(புதன்கிழமை) ஒத்தி வைத்து அறிவித்தது.

SCROLL FOR NEXT