இந்தியா

ஏழைகளுக்கு ரூ.10-க்கு சாப்பாடு- மகாராஷ்டிர அரசு தொடக்கம்

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநில அரசு ரூ.10-க்கு சாப்பாடு வழங்குவதற்காக ‘சிவ் போஜன்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது.

சமீபத்தில் நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 71-வது குடியரசு தினமான நேற்று முன்தினம், சிவ் போஜன் என்ற திட்டத்தை சிவசேனா தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு அறிமுகம் செய்தது.

மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் அஸ்லம் ஷேக் சிவ் போஜன் உணவகத்தை தொடங்கி வைத்தார். இதுபோல பாந்த்ராவில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிவ் போஜன் உணவகத்தை சுற்றுலா துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே தொடங்கி வைத்தார். மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த உணவகம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையிலான இந்த திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஏழைகள் வசிக்கும் அல்லது பணிபுரியும் பகுதியில் ஒரு உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த உணவகங்களில் ரூ.10-க்கு உணவு வழங்கப்படுகிறது. 2 சப்பாத்தி, சாதம், பொரியல், பருப்பு ஆகியவை வழங்கப்படும். இந்த உணவகங்களில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சாப்பாடு கிடைக்கும். இந்த திட்டத்துக்கான வரவேற்பை பொறுத்து பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

SCROLL FOR NEXT