தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி 
இந்தியா

உ.பி.யில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தாக்குதல்: ராகுல், பிரியங்கா தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு

பிடிஐ

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது மக்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் மனு அளித்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்தது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 23 பேர் உயிரிழந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீஸார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் போலீஸில் புகார் அளித்தாலும், அந்த புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை, போலீஸாரி்ன் பெயரும் இடம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் மக்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி எம்பி. ஆகியோர் இன்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். 31-பக்கங்கள் கொண்ட அந்த மனுவில் போலீஸார் நடத்திய மனித உரிமை மீறல்கள், புகைப்படங்கள், ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

இந்த சந்திப்புக்குப்பின் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், " உத்தரப்பிரதேச அரசு சொந்த மக்களுக்கு எதிராகவே போர் தொடுக்கிறது. மக்கள் மீது போலீஸாரும், மாநில அரசும் நடத்திய அடக்குமுறைகள், தாக்குதல்கள் குறித்த ஆதாரங்களைத் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் அளித்தோம். அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் காக்கும் என நம்புகிறேன். மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு சொந்த மக்களை கிரிமினல்களாகப் பார்க்கிறது " எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT