மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கு புதுமையான திட்டங்கள் தமிழ்நாட்டில் உருவானதாக பிரதமர் மோடி கூறினார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழையும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவரது கடந்த ஆட்சியைப் போல இந்த ஆட்சியிலும் மன் கி பாத் உரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது.
பிரதமர் மோடியின் 2020- ம் ஆண்டின் முதல் மன்கி பாத் உரை நிகழ்ச்சி இன்று (26 ம் தேதி) நடைபெற்றது. இந்நிகழ்ச்சி 61 வது நிகழ்ச்சியாகும். இன்று குடியரசு தினம் என்பதால் அவரது உரை காலையில் ஒளிபரப்புச் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மாலை ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
அவர் தனது உரையில் கூறியதாவது:
குடியரசு தினத்தன்று உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனுபவத்தை பகிரவும் கற்கவும், மக்களுடன் இணைந்து பழக "மன்கி பாத்" தளமாக அமைந்துள்ளது.
நம்நாட்டு மக்களின் சமீபத்திய சாதனைகளை கொண்டாட இங்கு வந்துள்ளோம். மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கு கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்துவது போன்ற புதுமையான திட்டங்கள் தமிழ்நாட்டில் உருவானது. இதை போன்ற எண்ணற்ற திட்டங்கள் புதிய இந்தியாவிற்கு வலு சேர்க்கிறது.
இந்திய வீரர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். கால்பந்து விளையாட்டில் புகழ்பெற்றவர் யார் என்று கேட்டால் டேவிட் பெக்காம் என்று கூறுவீர்கள். அவரைப்போன்ற ஒருவர் குவஹாட்டியில் உள்ளார். இளைஞரான அவர் சைக்கிள் பந்தயத்தில் 200 மீட்டர் ஸ்பிரிண்ட் நிகழ்வில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்கப்படுத்தும் விதமாக தேசிய அளவில் கெலோ இந்திய பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் போட்டி பிப்ரவரி 22- ம் தேதி முதல் மார்ச் 1 -ம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 3 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கு கொள்ள உள்ளனர். இந்த போட்டிகள் ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மற்றும் புவனேஸ்வரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்,