நாடு தனது 71 வது குடியரசு தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் இன்று காலை அசாமில் நடந்துள்ள நான்கு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் உல்ஃபா தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது.
திப்ருகரில் மூன்று குண்டுவெடிப்புகளும், மேல் அசாமின் சரைடியோ மாவட்டங்களில் 10 நிமிட இடைவெளியில் - ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 முதல் 8.25 மணி வரை நடந்ததாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
அப்பர் அசாமை உலுக்கிய இந்த குண்டுவெடிப்புகளும் காலை 8.15 முதல் 8.25 வரை 10 நிமிட இடைவெளியில் நிகழ்ந்ததாகவும் குடியரசு தினம் விடுமுறை என்பதால், மக்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருந்ததால், எந்தவொரு விபத்து தொடர்பான சம்பவங்களும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.
பரேஷ் பருவா தலைமையிலான உல்ஃபா (ஐ), வடகிழக்கு இந்தியாவின் சில பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து பிராந்தியத்தில் குடியரசு தின கொண்டாட்டங்களை புறக்கணிக்க இன்று அழைப்பு விடுத்திருந்தது.
சில ஆதாரங்களின்படி, இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் உல்ஃபா (இன்டிபென்டன்ட்) தீவிரவாதக் கும்பலின் கைவேலைதான் என சந்தேகத்தை ஏற்படுத்தின. அது தற்போது உறுதியாகியுள்ளது.
உல்ஃபா தீவிரவாதக்குழுவின் துணைத் தளபதி ஜாய் அசோம் கையெழுத்திட்ட அறிக்கையில், இன்று அசாமில் அடுத்தடுத்து நடந்த அனைத்து குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் நாங்களே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் சர்பானந்த் சோனவால் இந்த வெடிகுண்டு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில், அசாமின் ஒரு சில இடங்களில் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடத்தியவர்களுக்கு எனது கடுமையான கண்டனங்கள். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு புனித நாளில் பயங்கரவாதத்தை உருவாக்க நடத்தப்பட்ட கோழைத்தனமான முயற்சி இது. மக்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட பின்னர் பயங்கரவாத குழுக்கள் விரக்தியை இவ்விதமாக வெளிப்படுத்தியுள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.