மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழை மக்கள், கூலி வேலைக்குச் செல்வோர் பயன்பெறும் வகையில் 10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு வழங்கும் 'ஷிவ போஜன்' திட்டத்தை 71-வது குடியரசு தினமான இன்று உத்தவ் தாக்கரே அரசு தொடங்கியது.
முதல் கட்டமாக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஒரு உணவகம் வீதம் சோதனை கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஆட்சியில் உள்ள சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்த கூட்டணி அரசின் முக்கிய வாக்குறுதி 10 ரூபாய்க்குச் சாப்பாடு வழங்கும் திட்டமாகும். அதை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது மகாவிகாதி அரசு.
மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனை அருகே தொடங்கப்பட்ட ஷிவ போஜன் உணவகத்தை அமைச்சர் அஸ்லாம் ஷேக் தொடங்கி வைத்தார். பாந்த்ரா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கப்பட்ட உணவகத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே தொடங்கி வைத்தார் புனேயில் அஜித் பவாரும், நாசிக் மாவட்டத்தில் சாஹன் பூஜ்பாலும் தங்கள் மாவட்டங்களில் உணவகத்தைத் தொடங்கினர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், " 10 ரூபாய்க்கு மதிய உணவுத் திட்டத்தில் 2 கோதுமை சப்பாத்திகள், ஒரு காய், அரிசிச் சாதம், பருப்பு ஆகியவை இருக்கும். வெளி ஹோட்டல்களில் இந்த சாப்பாடு ரூ.50க்கும், கிராமப்புறங்களில் ரூ.35க்கும் விற்கப்படுகிறது. ஆனால் சாமானிய மக்களுக்காக ரூ.10க்கு அரசு வழங்குகிறது.
ஷிவ போஜன் உணவகங்களில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை உணவுகள் வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு 500 சாப்பாடுகள் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.
இன்று உணவகம் தொடங்கப்பட்டதுமே மக்கள் சாப்பிடுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். உணவு மிகவும் தரமாகவும், சுவையாகவும், இருப்பதாக மக்கள் தெரிவித்தார்கள். உணவு வழங்கும் நேரத்தை சிறிது நீட்டிக்கவும் கோரிக்கை விடுத்தார்கள்.
ஷிவ போஜன் கேண்டீன்கள் பெரும்பாலும் ஏழை மக்கள் வசிக்கும் பகுதி, மார்க்கெட், மாவட்ட மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றின் அருகே திறக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது