இந்தியா

டெல்லி தேர்தலில் போட்டியிடுவோரில் 164 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்

செய்திப்பிரிவு

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 164 பேர் கோடீஸ்வரர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் சொத்து வைத்துள்ளனர் என்பது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் 13 வேட்பாளர்களுக்கு ரூ.50 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. அதிகபட்சமாக முந்த்கா தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் தரம்பால் லக்ராவுக்கு ரூ.292.1 கோடி சொத்து உள்ளது.

ஆர்.கே.புரம் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி பெண் வேட்பாளர் பர்மிளா டோக்காஸ் 2-வது இடத்தில் உள்ளார். அவர் மற்றும் அவரது கணவரது பெயர்களில் ரூ.80.8 கோடிக்கு சொத்து உள்ளது.

ஆம் ஆத்மியின், பந்தார்பூர் தொகுதி வேட்பாளர் ராம் சிங் நேதாஜி 3-வது இடத்தில் உள்ளார். அவரது பெயரில் ரூ.80 கோடிக்கு சொத்து உள்ளது. பட்டேல் நகர் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் ராஜ் குமார் ஆனந்த் ரூ.76 கோடி மதிப்புள்ள சொத்துகளை வைத்து 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

5-வது இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா சிங் உள்ளார். அவரது பெயரில் ரூ.70.3 கோடிக்கு சொத்துகள் உள்ளன.

6, 7, 8-வது இடங்களை பாஜக வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். சத்தர்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் பிரம் சிங் தன்வாருக்கு ரூ.66.3 கோடி சொத்தும், கிருஷ்ணா நகரில் போட்டியிடும் அனில் கோயலுக்கு ரூ.64.1 கோடி சொத்தும், பிஜ்வாசனில் போட்டியிடும் பிரகாஷ் ராணாவுக்கு ரூ.57.4 கோடி சொத்தும் உள்ளது.

9, 10-வது இடங்களை ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். ரஜவுரி கார்டன் தொகுதியில் மனு தாக்கல் செய்துள்ள தன்வந்தி சண்டேலா தனது பெயரில் ரூ.56.9 கோடிக்கு சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். உத்தம் நகரில் போட்டியிடும் நரேஷ் பல்யான் தனக்கு ரூ.56.3 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.

ரூ.50 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ள 13 வேட்பாளர்களில் 13 பேர் ஆம் ஆத்மியையும், 4 பேர் காங்கிரஸையும், 3 பேர் பாஜகவையும் சேர்ந்தவர்கள்.

அதே நேரத்தில் ரூ.1 லட்சம் அல்லது அதற்குக் குறைவான சொத்துகளை வைத்துள்ள 5 வேட்பாளர்களும் டெல்லி தேர்தல் களத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராக்கி துசீட், ராஜேந்திர நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.55,574 மட்டுமே. அவருக்குச் சொந்தமாக வாகனங்கள், நகைகள், வீடு, நிலம் என எதுவுமே இல்லை.

பாஜகவைச் சேர்ந்த ராஜ் குமார் தில்லான் (கோன்ட்லி தொகுதி) வசம் ரூ.55,900 மதிப்புள்ள சொத்துகளே உள்ளன. இவர் கல்யாண்புரி குடிசைப் பகுதியில் வசித்து வருகிறார். பெட்டிக் கடை வைத்துள்ள தில்லான், தனக்கு சொந்தமாக வாகனம், வீடு என எதுவும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT