இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். படம்: பிடிஐ 
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி - அதிபர் போல்சனாரோ சந்திப்பு: இந்தியா, பிரேசில் இடையே 15 ஒப்பந்தம் கையெழுத்து

செய்திப்பிரிவு

இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்றுக்கொண்ட அவர் தனது வருகையை உறுதி செய்திருந்தார். இதன்படி போல்சனாரோ நேற்று முன்தினம் டெல்லி வந்தடைந்தார். அவர் இந்தியா வந்திருப்பது இதுவே முதல் முறை. அவருடன் மகள் லாரா, மருமகள் லெடிசியா பிர்மோ, 8 அமைச்சர்கள், 4 எம்.பி.க்கள் மற்றும் தொழிலதிபர்கள் குழுவும் இந்தியா வந்துள்ளது.

டெல்லி வந்தடைந்த பிரேசில் அதிபரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாட்டு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “போல்சனாரோ வருகை இருதரப்பு ஒத்துழைப்பில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்” என பதிவிட்டுள்ளார்.

பின்னர் பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, பிரதமர் மோடியும் போல்சனாரோவும் சந்தித்துப் பேசினர். அப்போது, இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பின்னர் வர்த்தகம்-முதலீடு, எண்ணெய்-எரிவாயு, இணையதள பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறும்போது, “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பிரேசில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே பூகோள ரீதியாக நீண்ட இடைவெளி இருந்தாலும் பல்வேறு சர்வதேச பிரச்சினைகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. பிரேசில் அதிபரின் வருகையால், இரு நாடுகளுக்கிடையிலான உறவில் புதிய அத்தியாயம் உருவாகும். இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவதற்கான செயல் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பிரேசில் அதிபர் போல்சனாரோ கூறும்போது, “இந்தியா, பிரேசில் இடையே ஏற்கெனவே வலுவான உறவு உள்ளது. இப்போது 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதன் மூலம் இது மேலும் வலுவடையும்” என்றார்.

டெல்லியில் உள்ள ராஜ பாதையில் இன்று நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

SCROLL FOR NEXT