இந்தியா

15 சுற்றுலா தலம் சென்றால் பயண செலவை அரசே ஏற்கும்: மத்திய அமைச்சர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஒடிசாவின் கொனார்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய சுற்றுலா மாநாட்டில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பேசியதாவது:

நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்கள் பட்டியலில் ஒடிசாவின் கொனார்க்கும் விரைவில் சேர்க்கப்படும். சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் கூடுதலாக ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் கலந்தோலோசித்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

ஓராண்டில் 15 சுற்றுலா தலங்களுக்கு செல்வோருக்கான பயண செலவை மத்திய சுற்றுலா துறையே ஏற்றுக் கொள்ளும். வெளி மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும். சுற்றுலா சென்றதற்கு ஆதாரமாக சுற்றுலா அமைச்சகத்தின் இணையதளத்தில் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா துறை தூதர்களாகவும் அறிவிக்கப்படுவார்கள். விரைவில் புதிய சுற்றுலா கொள்கை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஓராண்டில் 15 சுற்றுலா தலங்களுக்கு செல்வோரின் பயண செலவை அரசே ஏற்கும் திட்டம் தொடர்பான விரிவான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று சுற்றுலா அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT