நடனப் பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து 14 வயது பள்ளி மாணவி இறந்தசம்பவம் கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்க வயல் (கேஜிஎப்) உள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கேஜிஎப்-புக்கு அருகே கொல்லஹள்ளி கிராமம் உள்ளது.
இந்த கிராமத்திலுள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார் பூஜிதா என்ற 14 வயது மாணவி. கடந்த வியாழக்கிழமை பள்ளியில் நடனப் பயிற்சி நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவி பூஜிதா, மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர்அருகிலுள்ள பங்காருபேட்டையிலுள்ள கே.எல். ஜாலப்பா தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.
இதுகுறித்து கேஜிஎப் போலீஸ்கண்காணிப்பாளர் முகமது சுஜீதாகூறும்போது, “பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவி மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் இறந்ததாகவும் தகவல் வந்தது. இதுதொடர்பாக மாணவி பயிலும் விமலா இருதயாலயா பள்ளி நிர்வாகமோ, மாணவியின் பெற்றோரோ புகார் தரவில்லை” என்றார்.
இதுகுறித்து கே.எல்.ஜாலப்பா மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறும்போது, “மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிராமத்தில் இருந்தஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரது இருதயத்தை மீண்டும் செயல்படவைக்க முயற்சிகள் நடந்துள்ளன.அது முடியாததால் எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு வரும்போதே அவர் இறந்துவிட்டார்” என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் நடைபெறவிருந்த கலைநிகழ்ச்சிக்காக இந்த நடன ஒத்திகை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. இந்த ஒத்திகையின்போது பள்ளிச் சிறுமி பூஜிதாதிடீரென மயங்கி விழுந்து இறந்ததால் பள்ளியில் நடைபெறவிருந்த கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.