சீனாவை அச்சுறுத்தி, உலகையே கவலைக்குள்ளாகி வரும் கரோனா வைரஸை எதிர்கொள்ள இந்தியா எந்த அளவுக்குத் தயாராகி இருக்கிறது என்பது குறித்து பிரதமர் அலுவலகம் இன்று அவசரமாக ஆலோசனை நடத்தியது.
பிரதமர் மோடியின் அறிவுரையின் அடிப்படையில், பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா, சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கரோனா வைரஸை எதிர்கொள்ள எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, சுகாதார ஏற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது
அமைச்சரவைச் செயலாளர், உள்துறை செயலாளர், வெளியுறவு செயலாளர், பாதுகாப்பு செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டார்கள்.
இந்தக் கூட்டம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், " சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இந்தியாவில் எவ்வாறு தயாராகி இருக்கிறோம். ஆய்வுக்கூடங்கள் தாயாராக இருக்கின்றனவா, கரோனா வைரஸ் பாதித்திருப்பதாக சந்தேகப்படுபவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் சீனாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளைப் பரிசோதிக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பல்வேறு மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் உதவியுடன் சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. 7 விமானநிலையங்களில் 115 விமானங்களில் வந்த 20 ஆயிரம் பயணிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளார்கள்
வைரஸ் கிருமி குறித்து ஆய்வு செய்யும் தேசிய வைராலஜி ஆய்வுக்கூடமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாநில, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்" எனத் தெரிவித்தார்