டெல்லி மாடல் டவுன் பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா : படம் ஏஎன்ஐ 
இந்தியா

டெல்லி பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா 48 மணிநேரம் பிரச்சாரம் செய்யத் தடை: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பிடிஐ

டெல்லி மாடல் டவுன் தொகுதியின் பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா சர்ச்சைக்குரிய கருத்துக்களை டிவிட்டரில் தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு 48 மணிநேரம் பிரச்சாரம் செய்யத் தடை விதித்துத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று மாலை 5 மணி முதல் அடுத்த 48 மணிநேரத்துக்கு கபில் மிஸ்ரா பிரச்சாரம் செய்யத் தடைவிதித்து தலைமைத் தேர்தல் ஆணையரும், இரு தேர்தல் ஆணையர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ராவின் கருத்துக்களைத் தேர்தல் ஆணையம் கண்டிக்கிறது. அவர் அடுத்த 48 மணிநேரத்துக்கு எந்தவிதமான பொதுக்கூட்டம் நடத்தவோ, ஊர்வலம் நடத்தவோ, நேர்காணல் அளிக்கவோ, ஊடகங்களிடம் பேசவோ கூடாது

கடந்த 22 மற்றும் 23-ம் தேதி டெல்லி பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா ட்விட்டரில் தேர்தல் குறித்து வரும் பிப் 8-ம் தேதி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போட்டி என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளைப் பாகிஸ்தான் போல் சித்தரித்திருந்தார். இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது

மேலும், கபில் மிஸ்ரா ட்விட்டரில் தெரிவித்த கருத்து குறித்துத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் பிரிவு 25-ன் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேர்தல் நேரத்தில் நடத்தை விதிமுறைகளை மீறி இரு பிரிவினரிடையே வேறுபாட்டை உருவாக்கியும், வெறுப்பை உருவாக்கும் விதத்திலும் கபில் சர்மா கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT