குடியரிமைச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களும், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும், என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
குறிப்பாகக் கேரளா, பஞ்சாப் மாநில அரசுகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கூறி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.
இந்தநிலையில் மூன்றாவது மாநிலமாக குடியரிமைச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் ‘‘நாட்டில் முதன்முறையாக மதத்தின் பெயரால் பாகுபாடு காட்டப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நாடுமுழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.