பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்தடைந்தார்.
ஜனவரி 26 ஆம் தேதி இந்தியக் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று 8 அமைச்சர்களுடன் இந்தியா வந்தடைந்த ஜெய்ர் போல்சோனரோவுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவுக்கு ராணுவ அணிவகுப்புடன் அரசு மரியாதை வழங்கப்பட்டது.
ஜெய்ர் போல்சோனரோவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.
பிரேசில் அதிபரின் நான்கு நாள் இந்தியப் பயணத்தில், இந்தியா - பிரேசில் இடையே வர்த்தகம், அறிவியல், தொழில் நுட்பம் என இரு நாட்டு உறவு முன்னேற்றம் சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.