குடியரசுத் தலைவரிடம் இருந்து விருது பெறும் 'இந்து தமிழ்' நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன். படம்: ஆர்.வி.மூர்த்தி. 
இந்தியா

'இந்து தமிழ்' நாளேட்டுக்கு தேர்தல் ஆணையத்தின் தேசிய விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

செய்திப்பிரிவு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மத்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய விருதை ‘இந்து தமிழ்’ நாளேட்டுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இதனை ‘இந்து தமிழ்’ நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் பெற்றுக்கொண்டார்.

கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ல் மத்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த நாளை நினைவுகூரும் வகையில், கடந்த 2011 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட புதிய வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது இதன் முக்கிய நோக்கம் ஆகும். இதில் குறிப்பாக இளம் வாக்காளர்களின் எண்ணிக்கையை மத்திய தேர்தல் ஆணையம் அதிகப்படுத்துகிறது.

இந்த நாளை நாட்டின் வாக்காளர்களுக்கு சமர்ப்பித்து அவர்களை தேர்தலில் தவறாமல் வாக்களிக்கச் செய்வதற்கான முயற்சியிலும் மத்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, நாட்டின் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் இடங்களில் அமைந்துள்ள பத்து லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மாநில அரசுகள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு தினத்தைக் கொண்டாட அதன் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் அனுப்பப்படுகிறது. இந்தப் பணியில் தங்களுக்கு உதவும் பல்வேறு பிரிவினரைப் பாராட்டி, கடந்த 2011-ம் ஆண்டு முதல் அவர்களுக்கு மத்திய தேர்தல் ஆணையம் தேசிய விருதை வழங்கி கவுரவித்து வருகிறது.

குறிப்பாக, தேர்தலை திறம்பட நடத்திய மத்திய, மாநில, மாவட்ட அதிகாரிகள், இதற்கு உதவியாக இருந்த வாக்காளர்கள் இடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்திய சமூக நல அமைப்புகள் மற்றும் இது தொடர்பான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் ஆகியவற்றுக்கும் தனித்தனியாக 5-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஊடக நிறுவனங்களுக்கான விருதுகள் 4 வகையாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இதில், அச்சு ஊடகங்கள், செய்தி தொலைக்காட்சிகள், இணையதளங்கள் மற்றும் வானொலி நிறுவனங்கள் ஆகியன இடம் பெற்றுள்ளன. இவற்றில் வெளியான செய்திகளால் வாக்காளர்கள் விழிப்புணர்வு பெற்று தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உதவியதை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு அச்சு ஊடகத்துக்கான தேசிய விருது ‘இந்து தமிழ்’ நாளேட்டுக்கு வழங்கப்பட்டது. டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து 'இந்து தமிழ்' நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் விருதைப் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோ:

SCROLL FOR NEXT