இந்தியா

குற்ற பின்னணி உடையோர் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் யோசனை

செய்திப்பிரிவு

குற்றப் பின்னணி உடையோர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என்று கோரி பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் கூறும்போது, "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்ற திட்டம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே தேர்தலில் போட்டியிட குற்றப்பின்னணி உடையோருக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் அஸ்வினி உபாத்யாயா தரப்பில் கூறும்போது, "கடந்த 2018 செப்டம்பரில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்றப் பின்னணியை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விவரங்களை அச்சு, மின்னணு ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் முறையாக அமல்படுத்தவில்லை" என்று குற்றம் சாட்டப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறும்போது, "மனுதாரர் அஸ்வினி உபாத்யாயாவும் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் ஆலோசித்து குற்றப்பின்னணி உடையோர் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது தொடர்பான விதிமுறைகளை ஒரு வாரத்துக்குள் வகுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர். குற்றப்பின்னணி உடையோர் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது தொடர்பான விதிமுறைகளை ஒரு 
வாரத்துக்குள் வகுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT