என். மகேஷ்குமார்
ஆந்திர மாநிலம் 3 தலைநகர் பிரச்சினையில் சிக்கி தவித்து வருகிறது. அமராவதியில் சட்டப்பேரவை, விசாகப்பட்டினத்தில் தலைமை செயலகம், ஆளுநர் மாளிகை, அமைச்சர்கள் குடியிருப்பு பகுதிகள், கர்னூலில் உயர் நீதிமன்றம் அமைப்பது குறித்து ஆந்திர பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அமராவதியில் பெண்கள், விவசாயிகள் உட்பட பல்வேறு அமைப்பினர், கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேரவையில் 3 தலைநகரங்கள் குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும், மேலவையில் இந்த மசோதா நிறைவேறவில்லை. இதனால், மேலவையை ரத்து செய்து விடலாமா என்றும் ஜெகன் ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பேரவையில் முதல்வர் ஜெகன் பேசும்போது, “அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 174-ன்படி, தலைநகரம் என்று அரசியல் சாசனத்தில் எங்கும் கூற வில்லை. தலைமை செயலகத்தின் தலைவர் முதல்வராவார். அவர் எங்கு இருந்தாலும் ஆட்சி செய்யலாம்.
இதற்கென ஒரு தனி இடம் தேவையில்லை. உதாரணமாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட உதகையில் இருந்து சில நாட்கள் ஆட்சி செய்தார். ஹுத்ஹுத் புயல் வந்தபோது, அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட அப்போது விசாகப்பட்டினத்தில் முகாமிட்டு சுமார் 10 நாட்கள் வரை ஆட்சி புரிந்தார்” என்றார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறும்போது, ‘‘தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கவே உதகை சென்றார். அங்கிருந்து ஆட்சி புரிவதற்காக அவர் செல்லவில்லை. இதனை ஜெகன்மோகன் ரெட்டி உண்மைக்கு புறம்பாக திரித்துக் கூறுகிறார். இதேபோன்று இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் தலைநகரம் என்பதே இல்லை என கூறியுள்ளதும் உண்மைக்கு புறம்பானதாகும்’’ என்றார்.