குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) தொடர்பான அச்சத்தைப் போக்க நாடு முழுவதும் கருத்தரங்குகளை நடத்த தேசிய சிறுபான்மையினர் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க சிஏஏ சட்டம் வழிவகுக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
எனினும் இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக தரப்பில் சிஏஏ சட்டத்தை ஆதரித்து நாடு முழுவதும் வீடு, வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிஏஏ சட்டம் தொடர்பான அச்சத்தைப் போக்க தேசிய சிறுபான்மையினர் ஆணையம் உத்தர பிரதேசத்தில் பல்வேறு கருத்தரங்குகளை நடத்தியது. இதற்காக ஆணையத்தின் சார்பில் சுமார் 300 முஸ்லிம்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் ஆணையம் சார்பில் முதல்கட்டமாக 6 கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த கருத்தரங்குகள் மூலம் முஸ்லிம் மக்களிடையே எழுந்துள்ள சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு அவர்களின் அச்சம் போக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் வரவேற்பு கிடைத்துள்ளதால் நாடு முழுவதும் சிஏஏ தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த சிறுபான்மையினர் நல ஆணையர் திட்டமிட்டுள்ளார்.
அச்சம் நீங்கியுள்ளது
இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் சையது கயோருல் ஹசன் ரிஸ்வி கூறியதாவது:
சிஏஏ தொடர்பாக உத்தரபிரதேசத்தில் நாங்கள் நடத்திய கருத்தரங்குகளின் மூலம் முஸ்லிம்களின் அச்சம் நீங்கியுள்ளது. இதேபோல கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், அசாம் உட்பட நாடு முழுவதும் கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த கருத்தரங்குகள் மூலம் முஸ்லிம்களிடையே எழுந்துள்ள அனைத்து குழப்பங்களும் நீங்கும் என்று நம்புகிறோம்.
சிஏஏ சட்டத்தால் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்த 6 மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு சிஏஏ சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.