தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் சரத் பவாரின் டெல்லி வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளதாகவும் இது பழிவாங்கும் அரசியல் என்றும் அவரது கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து மகாராஷ்டிரா அமைச்சரும் என்சிபி செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக் நேற்று கூறும்போது, “மாநிலங்களவை எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவாருக்கு டெல்லியில் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. டெல்லியில் உள்ள பவாரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் கடந்த 20-ம் தேதி முதல் பணிக்கு வரவில்லை.
இது தொடர்பாக அரசிடம் இருந்து எங்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்படவில்லை. இது பழிவாங்கும் அரசியல் ஆகும். இதன் மூலம் என்சிபி தலைவர்களின் அரசியல் பணிகளை தடுக்க முடியும் என பாஜக அரசு நினைத்தால் அது தவறான எண்ணமாகும். பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான எங்களது செயல்பாடுகள் தொடரும்” என்றார். மகாராஷ்டிர மாநில என்சிபி தலைவரும் மற்றொரு அமைச்சருமான ஜெயந்த் பாட்டீலும் மத்திய அரசுக்கு கண் டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசில் என்சிபி முக்கியப் பங்கு வகிக்கிறது. அம்மாநிலத்தில் சரத் பவாருக்கு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
- பிடிஐ