நரேந்திர மோடி 
இந்தியா

நேபாளம் வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு: வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கயாவாலி தகவல்

செய்திப்பிரிவு

நேபாளம் வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கயாவாலி, காத்மாண்டில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

நேபாளத்தின் சார்பில் ‘சாகர்மாதா சம்பாத்' (எவரெஸ்ட் பேச்சுவார்த்தை) மாநாடு வரும் ஏப்ரல் 2 முதல் 4-ம் தேதி வரை காத்மாண்டில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நேபாள பயணத்தை அவர் உறுதி செய்வார் என்று நம்புகிறோம்.

'சாகர்மாதா சம்பாத்' மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட சார்க் நாடுகளை சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். இந்த மாநாட்டில் பிராந்திய பருவநிலை, மலைகள், மக்களின் எதிர்காலம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நேபாளத்தில் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டோம். இதுதொடர்பாக இந்திய அரசிடம் உறுதி அளித்திருக்கிறோம். தெற்காசிய பிராந்தியத்தின் நலனை கருத்திற் கொண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் கருத்து வேறுபாடுகளை மறந்து நல்லுறவைப் பேண வேண்டும்.

சார்க் மாநாட்டின் தலைவர் பதவியில் நேபாளம் உள்ளது. இந்தப் பதவியை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2016 சார்க் மாநாடு ரத்து

கடந்த 2014-ம் ஆண்டில் நேபாள தலைநகர் காத்மாண்டில் சார்க் மாநாடு நடைபெற்றது. அதன்பிறகு 2016-ம் ஆண்டில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் அந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா மறுத்துவிட்டது.

இந்தியாவுக்கு ஆதரவாக வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன. இதனால் இஸ்லாமாபாத் மாநாடு ரத்து செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT