நீதிமன்றம் மற்றும் போலீஸ் காவலில் இருக்கும் ஒருவர் காணாமல் போனாவோ அல்லது மர்மமாக இறந்தாலோ அல்லது போலீஸால் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டாலோ நீதிமன்ற விசாரணை கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும், அதற்குரிய சிஆர்பிசி பிரிவு 176(1ஏ)பிரிவு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது
மனித உரிமைகள் ஆர்வலர் சுஹாஸ் சக்மா உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, நீதிமன்றக் காவலில் இருக்கும் ஒருவர் காணாமல் போனாலோ அல்லது மர்மமாக இறந்தாலோ அல்லது போலீஸாரால் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டாலோ நீதிமன்ற விசாரணை கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த சிஆர்பிசி பிரிவு நடைமுறைக்கு வந்தும், போலீஸ் காவலில் உள்ளோர் இறப்பதும், பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாவதும் நாள்தோறும் 66 சதவீதம் அதிகரித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பில் 58 பேர் மர்மமாக இறந்துள்ளார்கள், ஆனால் ஒரு வழக்கில் மட்டும் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, தலைநகர் டெல்லியில் 5 வழக்குகள் இருக்கும் நிலையில் அதில் ஒன்று மட்டுமே நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
என்சிஆர்பி வெளியிட்ட புள்ளிவிவரத்தை சுட்டிக்காட்டி கிரைம் இன் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், 2005 மற்றும்2017-ம் ஆண்டுக்கு இடையே ரீமாண்ட் செய்யப்படாமல் போலீஸ் பாதுகாப்பில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் 827 பேர் மர்மமாக இறந்தோ அல்லது காணாமலோ போயுள்ளார்கள். இதில் 20சதவீத வழக்குகள் அதாவது 166 வழக்குகளில் மட்டுமே நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதேபோல 2005 முதல் 2017-ம் ஆண்டுவரை நீதிமன்ற காவலில் கொண்டு செல்லப்பட்ட 476 பேர் காணாமல் போயும், மர்மமாக இறந்தும் போயுள்ளார்கள். ஆனால், அதில் 104 வழக்குகளில் மட்டுமே நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த 476 வழக்குகளில் 276 வழக்குகள் மட்டும் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது, 54 போலீஸார் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் காவல் வைக்கப்படாமல் போலீஸாரின் சம்மனை மதித்து விசாரணைக்குச் செல்லும் ஏராளமான மக்கள் காணாமல் போகிறார்கள், சிலர் கொல்லப்படுகிறார்கள். பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
ஆனால், இவ்வாறு காணாமல் போகும், கொலைசெய்யப்படும் பலாத்காரம் செய்யப்படும் வழக்குகளில் சிஆர்பிசி 176(1ஏ) ஏன் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் நீதிமன்ற விசாரணைக்குப் பதிலாக நிர்வாக ரீதியான மாஜிஸ்திரேட் விசாரணை மட்டுமே நடக்கிறது. அவ்வாறு நடக்கும் விசாரணையும் திருப்திகரமாக இல்லை.
ஆதலால், இதுபோன்று நீதிமன்ற காவலில், அல்லது போலீஸ் காவலில் காணாமல் போனவர்கள், மர்மமாக இறந்தவர்கள், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் குறித்து காலாண்டுக்கு ஒருமுறை மாவட்ட நீதிபதி அறிக்கையாக உயர் நீதிமன்றத்துக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் அறிக்கையாக அளிக்க உத்தரவிட வேண்டும். சிஆர்பிசி பிரிவு 176(1ஏ)பிரிவு தீவிரமாக நடைமுறைப் படுத்வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எப் நாரிமன் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி 4 வாரங்களுக்குள் மத்திய அரசும், மாநில அரசுகளும் பதில் அளிக்க உத்தரவிட்டார்.