இந்தியா

சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறன. பாஜக சார்பில் குடியுரிமைச் சட்ட ஆதரவு பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் பல பகுதிகளில் பேரணி நடைபெற்றது. முதல்வர் யோகி ஆதித்யநாத் இதில் கலந்துகொண்டு பேசியதாவது:

‘‘போராட்டம் என்ற பெயரில் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்படும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிற்கு எதிராக சதி செய்வர்களை சகித்துக் கொண்டிருக்க முடியாது.

எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT