சீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் நோயின் தாக்கம் குறித்து உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய சீனாவில் கொரோனா வைரஸ் உருவானதாகக் கூறப்படும் வுஹான் நகரில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்திய மாணவர்களும் நலமாக இருக்கின்றனர். வுஹான் நகரத்தின் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் 500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள், அவர்களில் பெரும்பாலானோர் சீனப் புத்தாண்டு விடுமுறைக்காக வீட்டிற்குப் புறப்பட்டதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்தன.
பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தற்போது வுஹானில் உள்ள 40க்கும் மேற்பட்ட மாணவர்களின் சுகாதார நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்ட இந்திய ஆசிரியர் ஒருவர், கடந்த வாரம் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்னர், வுஹானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என இந்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டது.
கொடிய கரோனா வைரஸ் காரணமாக 18 பேர் உயிரிழந்தது பீதி ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, வுஹான் நகரத்தின் விமான நிலையம், ரயில் நிலையங்கள், குறுகிய தூரப் படகுகள் மற்றும் நீண்ட தூரப் பயண வழிகளை சீனா மூடியது.
வுஹானில் சுமார் 11 மில்லியன் மக்கள் உள்ளனர். அதிகாரபூர்வ பதிவுகளின்படி, தற்போது இறப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
சீன சுகாதார அதிகாரிகள் 29 மாகாணங்களில் 830 பேர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் 20 மாகாணங்களில் 1,072 பேரிடம் சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சகம் 145 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.