இந்தியா

‘விசித்திரமாக’ சாப்பிட்டதால் வங்கதேச தொழிலாளர்களாக இருப்பார்கள் என்று சந்தேகப்பட்ட பாஜக தலைவர்

பிடிஐ

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தேசியப் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வார்க்கியா, தன் வீட்டுக் கட்டுமானப்பணியின் போது வேலை செய்த தொழிலாளிகளில் சிலர் சாப்பிடுவது விசித்திரமாக இருந்ததாகக் கூறி வங்கதேசத்தவர்களோ என்று தான் சந்தேகப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்தூரில் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவான கருத்தரங்கில் பேசிய கைலாஷ் விஜய்வார்க்யா, தொழிலாளிகளில் சிலரின் விசித்திரமான சாப்பிடும் பழக்கம் தனக்கு அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தானா என்ற சந்தேகம் எழுந்ததாகத் தெரிவித்தார்.

சமீபத்தில் தன் வீட்டில் புதிய அறை ஒன்றைக் கட்டிய போது அதில் பணியாற்றிய சில தொழிலாளர்கள் போஹா என்ற வகை உணவை எடுத்துக் கொண்டது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது என்றார்.

உடனே தன் வீட்டு அறை கட்டும் சூப்பர்வைசர் மற்றும் ஒப்பந்ததாரரை அணுகி விசாரித்ததில் தனக்கு அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டது என்றார்.

பிற்பாடு செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது விஜய்வார்க்யா, “அந்த தொழிலாளிகள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர்கள் வேலைக்கு வரவில்லை, நான் போலீஸ் புகார் எதுவும் அளிக்கவில்லை. நான் இதனை மக்களை எச்சரிக்கவே கூறுகிறேன்” என்றதோடு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன்னை வங்கதேச பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளனர் என்றார்.

”நான் எப்போது வெளியே புறப்பாட்டலும் ஆயுதம் ஏந்திய 6 பாதுகாப்புப் படை வீரர்கள் என்னுடன் வருவார்கள். இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து பயங்கரத்தை ஏற்படுத்துவார்களா” என்றார் விஜய்வார்க்யா.

“வதந்திகளைக் கண்டு குழப்பமடையாதீர்கள், சிஏஏ நாட்டின் நலனுக்கானதுதான். இந்தச் சட்டம் உண்மையான அகதிகளுக்கு இடம் கொடுக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஊடுருவல்காரர்களை அடையாளப்படுத்துகிறது” என்றார் விஜய்வார்க்யா.

SCROLL FOR NEXT