மலாலாவை பாகிஸ்தான் பெண் என்று நாம் சுருக்கிவிட முடியாது. அவர் பெண் குழந்தைகளுக்கும் பெண் கல்விக்கும் சர்வதேச ஐகான் ஆகத் திகழ்பவர் என்று மலாலாவின் வாழ்க்கை வரலாற்றை 'குல் மகாய்' என்ற பெயரில் இந்தியில் இயக்கியுள்ள எச்.இ.அமஜத் கான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மலாலாவாக ரீம் ஷேக் நடித்திருக்கும் 'குல் மகாய்' பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் திரைப்படம். இதில் திவ்யா தத்தா, பங்கஜ் திரிபாதி, அதுல் குல்கர்னி மற்றும் முகேஷ் ரிஷி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'குல் மகாய்' இந்திப் படம் வரும் ஜனவரி 31 ஆம் தேதி நாடு முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் அனைத்தும் சென்ற ஆண்டே முடிந்துவிட்ட போதிலும் படத்தை வெளியிடாததற்குக் காரணம் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் வெறுப்புதான் என்று கூறுகிறார் இயக்குநர் எச்.இ.அமஜத் கான்.
இதுகுறித்து அவர் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''மலாலாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'குல் மகாய்' திரைப்படப் பணிகள் அனைத்தும் 2019-ம் ஆண்டே முடிந்துவிட்டன. ஆனால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக கடந்த ஆண்டு வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டியிருந்தது.
முதலில் புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்தது. பின்னர் இந்தியா பதிலடி கொடுத்தது. பின்னர் முத்தலாக் தடைச் சட்டம், அதைத் தொடர்ந்து 370-வது பிரிவு ரத்து. அயோத்தி தீர்ப்பு என்ற பாதையில் நாடே போய்க்கொண்டிருந்தது. பாகிஸ்தான் வெறுப்பு என்ற சூழல் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், இனி 'குல் மகாய்' திரைப்படத்தைத் தாமதப்படுத்தப் போவதில்லை.
மலாலா ஒரு பாகிஸ்தானியராக இருந்தாலும், இன்னும் உலகளாவிய சின்னமாக இருக்கிறார். பெண் கல்வியின் உலகளாவிய ஐகான் மலாலா. அவர் முழு உலகிலும் கல்வியை ஆதரிப்பவர். அவர் பெண் கல்வி மற்றும் பெண்கள் அதிகாரம் பற்றிப் பேசுகிறார். இதுவும் ஒருவகையில் பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ திட்டம்தான்.
குர் மகாய் திரைப்பட இயக்குநர் எச்.இ.அமஜத் கான் (இரண்டாவது படம்)
மலாலா நோபல் பரிசு பெற்றவர். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு இது புரியவில்லை அதுவே எனக்கு ஒரு கவலையாக இருந்தது. ஆனால், இதற்காக எல்லாம் காலதாமதப்படுத்த வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. அதனால்தான் இந்த மாதம் 31-ம் தேதியே படத்தை வெளியிடுவது என முடிவு செய்துள்ளோம். படம் வந்தபிறகு அதன் தாக்கம் நிச்சயம் எதிரொலிக்கும். விவாதிக்கப்படும்.
எனக்கு பாகிஸ்தான் குறித்து தனிப்பட்ட அனுதாபமோ, பச்சாதாபமோ இல்லை. ஏனெனில் அது ஒரு விசித்திரமான நாடு. ஒரு நாட்டின் வருமானத்தில் பெரும்பங்கை போர் மற்றும் போர் தளவாடங்களுக்குச் செலவழிக்கும் நாடு அது. அது எந்த நாட்டிற்கும் ஒருபோதும் நல்லதல்ல.
காஷ்மீரின் நிலைமை குறித்த மலாலாவின் கருத்துகள் படத்தைப் பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு என்னுடைய ஒரே பதில். பிராந்தியத்தில் நிலைமை காரணமாக மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல முடியவில்லை என்ற தகவல்கள் குறித்து மலாலா தனது கவலையைத் தெரிவித்தார். இதைத் தவிர இப்படத்தில் அரசியல் கருத்துகள் எதுவும் இல்லை.''
இவ்வாறு அமஜத் கான் தெரிவித்தார்.