சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் மும்பையிலும் இருவருக்கும் தொற்றி இருக்கலாம் என்பதால் அவர்களைத் தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
சீனாவின் வுஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். 900-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். மேலும், இந்த கரோனா வைரஸ் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், அமெரிக்காவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இதனால் அனைத்து நாடுகளும் கரோனா வைரஸ் பாதிப்பு வராமல் இருக்க, வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளைத் தீவிர பரிசோதனைக்குப் பின்பே அனுமதிக்கின்றன. இந்தியாவிலும் விமான நிலையங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு சீனாவில் இருந்து வருவோர் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த இருவர் சீனாவில் இருந்து திரும்பியுள்ளார்கள். அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, கரோனா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகளான இருமல், சளி, போன்றவை இருந்ததால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மும்பை மாநகராட்சியில் சார்பில் சிஞ்ச்போக்லி பகுதியில் இருக்கும் கஸ்தூரிபா மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி பத்மஜா கேஸ்கர் கூறுகையில், " சீனாவில் இருந்து மும்பை திரும்பிய இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பெயரில் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் தீவிரமான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பரிசோதனை முடிவுகள் ஏதும் வரவில்லை என்பதால், அவர்களுக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்பதை உறுதியாகக் கூற இயலாது.
மேலும், நகரில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களும் எச்சரிக்கையாக உள்ளனர். சீனாவில் இருந்து திரும்பிய யாருக்கேனும் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
கஸ்தூரிபா மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், "கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு கையாள்வது, சிகிச்சையளிப்பது போன்றவை குறித்து எங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைத் தீவிரமாகப் பின்பற்றி வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.