காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படைகளுக்கு, எல்லை பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.
சர்வதேச எல்லையில் உள்ள 3 இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இது குறித்து எல்லை பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "அக்னூர் நிலை மீது பாகிஸ்தான் தரப்பு தாக்குதல் நடத்தியது. இன்று காலை 10.40 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் எந்தவிதமானச் சேதமும் ஏற்படவில்லை" என்றார்.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக அவ்வப்போது பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 வீரர்களும், பூஞ்ச் பிரிவில் ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
கடந்த மாதம் முதல் இதுவரை 18 அத்துமீறிய தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவங்களில் 3 ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.