உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வரும் பிப்ரவரி 9-ம் தேதிக்குள் ராமர் கோயில் அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு சந்திக்கும் பல்வேறு சவால்களால் அறக்கட்டளை அமைப்பது தாமதமாகி வருகிறது.
பாபர் மசூதி, ராமஜென்ம பூமி நில வழக்கில், கடந்த நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும் இதற்காக 3 மாதத்துக்குள் அறக்கட்டளையை நிறுவ வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த அவகாசம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனினும், அறக்கட்டளை அமைப்பது தாமதமாகி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு சந்திக்கும் பல்வேறு சவால்களே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.
இதுகுறித்து மத்திய உள் துறை அமைச்சக வட்டாரங்கள் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “ராமர் கோயில் விவகாரம் என்பதால் நல்ல நாள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை துல்லியமாக பார்க்க வேண்டி உள்ளது. மேலும் ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினர்களை தேர்வு செய்வதில் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது. அறக்கட்டளைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு எழுவதை தவிர்க்க பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இப்பணி இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் அறக்கட்டளை தொடர்பான அறிவிப்பு வெளியாகும்” என்றனர்.
ராமர் கோயில் அறக்கட்டளையில் இடம்பெற அயோத்தியைச் சேர்ந்த பல்வேறு சாதுக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ராமர் கோயில் போராட்டத்தை முன்னிறுத்தி நடத்திய விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) உள்ளிட்ட பல அமைப்புகளும் அறக்கட்டளையில் இடம்பெற போட்டி போடுகின்றன. இதில் பாஜகவின் தோழமை அமைப்பான விஎச்பி, ராமர் கோயில் கட்டுவதற்காக தாங்கள் ஏற்கெனவே ஒரு அறக்கட்டளையை அமைத்துள்ளதால் புதிய அறக்கட்டளை தேவையில்லை என கூறி வருகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அந்த அறக்கட்டளையில் அரசியல்வாதிகள் எவரும் இடம்பெறக் கூடாது. எனினும், அயோத்தியில், ஏற்கெனவே இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்தரபிரதேச முதல்வராக இருந்த கல்யாண் சிங்கை உறுப்பினராக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. எனினும், இவர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு, முற்றிலும் அரசு அதிகாரிகளை மட்டும் உறுப்பினராக்கி சமூகத்தில் பிரபலமாக உள்ள இருவரையும் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில், அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக வேறு இடத்தில் நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. எனவே, அறக்கட்டளை தொடர்பான அறிவிப்புடன் சேர்த்து மசூதிக்கான நில ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.ஷபிமுன்னா