இந்தியா

பவன் குமார் விரும்பினால் கட்சியிலிருந்து வெளியேறலாம் ஐஜத தலைவர் நிதிஷ்குமார் அறிவிப்பு

செய்திப்பிரிவு

பாஜகவுடனான கூட்டணியை விமர்சித்த ஐக்கிய ஜனதா தளம் (ஐஜத) மூத்த தலைவர் பவன் குமார் வர்மாவை, கட்சியில் இருந்து வெளியேறலாம் என அக்கட்சியின் தேசிய தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அரசின் கொள்கைகளை ஐஜத கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான பவன் குமார் வர்மா அடிக்கடி விமர்சித்து வருகிறார். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்க வேண்டாம் என தனது கட்சியை அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் ஐஜத கூட்டணி அமைத்தது தொடர்பாக முதல்வர் நிதிஷ் குமாருக்கு பவன் குமார் கடிதம் எழுதினார். அதில், “2017-ல் பாஜகவுடன் நாம் கூட்டணி அமைத்தபோதும், நாட்டை ஆபத்தான பாதையில் பாஜக கொண்டு செல்வது மாறவில்லை என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறினீர்கள். பாஜகவின் தற்போதைய தலைமை தங்களை அவமானப்படுத்தி விட்டதாகவும் கூறியுள்ளீர்கள். இது உங்கள் உண்மையான கருத்தாக இருக்குமானால், பிஹாருக்கு வெளியே பாஜகவுடன் ஐஜத கூட்டணி அமைத்ததை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்த நேதாஜி பிறந்த நாள் விழாவில் நிதிஷ் குமார் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு நிதிஷ் பதில் அளிக்கும்போது, “கட்சியில் எவருக்கேனும் கருத்து வேறுபாடு இருந்தால் அதை கட்சிக்குள் அல்லது கட்சிக் கூட்டங்களில் எழுப்ப வேண்டும். இதுபோன்று வெளியில் பேசுவது வியப்பளிக்கிறது. பவன் குமார் விரும்பினால் கட்சியை விட்டு வெளியேறலாம். விரும்பிய கட்சியில் சேரலாம். அவருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

SCROLL FOR NEXT