காஷ்மீர் விவகாரத்தில், 370-வது சட்டப்பிரிவு தொடர்பான வழக்குகளை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவது குறித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் ஆணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின் மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 370-வது சட்டப்பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.வி. ரமணா, எஸ்.கே.கவுல், சுபாஷண் ரெட்டி, கவாய், சூர்ய காந்த் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. ஐந்தாவது நாளாக இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஷா, ராஜீவ் தவாண், சந்தர் உதய் சிங், கோபால் சங்கரநாராயணன், தினேஷ் துவிவேதி, சஞ்சய் பாரிக் ஆகியோர் ஆஜராகினர்.
ராஜீவ் தவாண் வாதாடியபோது, “காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டது சட்டவிரோதம். அதன் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோல இதர மாநிலங்களையும் யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கக்கூடும்” என்று தெரிவித்தார்.
மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினர். அவர்கள் கூறும்போது, “370-வது சட்டப்பிரிவு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெற முடியாது. யூனியன் பிரதேசமாக காஷ்மீர் மாற்றப்பட்டிருப்பது தற்காலிகமானது. காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்” என்று தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 370-வது சட்டப்பிரிவு தொடர்பான வழக்குகளை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவதா, வேண்டாமா என்பது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதன்பிறகு தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.