இந்திய முஜாகிதீன் தீவிரவாதி பைசான் அகமது சுல்தானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதச் செயல்கள் அரங்கேற்றப்படுவது அம்பலமாகியுள்ளது.
துபையில் வசித்து வந்த இந்திய முஜாகிதீன் தீவிரவாதி பைசான் அகமது சுல்தானை கைது செய்ய இன்டர்போல் சார்பில் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா வில் பைசான் அகமது சுல்தான் அண்மையில் கைது செய்யப் பட்டார். அங்கிருந்து கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி கொண்டுவரப்பட்ட அவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். தற்போது ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேசம் அசம்கர் மாவட்டம், தேவபரே கிராமத்தைச் சேர்ந்தவர் பைசான் அகமது சுல்தான். மும்பையில் வசித்து வந்த அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-ன் கைப்பாவையாக செயல்பட்டார்.
இந்தியாவில் இருந்து நேபாளம் வழியாகப் பாகிஸ்தான் தப்பிச் சென்ற அவர் ஐ.எஸ்.ஐ. முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் துபை சென்று அங்கு சுமார் 10 ஆண்டுகளாக பெரும் தொழிலதிபராக வலம் வந்துள்ளார்.
அங்கிருந்து கொண்டே இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்புக்கு ஆயுத உதவி, நிதியுதவி என பல்வேறு விதங்களில் அவர் உதவி செய்து வந்துள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் மேலும் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கக்கூடும் என்று என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.