குடியரசு தினம் நெருங்கி வருவதையொட்டி, பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் எந்தவிதமான கருத்துக்களும் வராமல் கண்காணிக்குமாறு உள்துறை அமைச்சகம் அனைத்து பாதுகாப்பு முகமைகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்துறை அமைச்சகத்துக்கு உளவுத்துறை விடுத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை உள்துறை அமைச்சகம் விடுத்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து பாதுகாப்பு முகமைகளின் தலைவர்கள், துணை ராணுவப்படை, சிறப்பு பாதுகாப்புக் குழு(எஸ்பிஜி) ஆகியவற்றுக்கு எச்சரிக்கை விடுத்து, கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கும்படியும், சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்கவும் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த வாரம் உள்துறை அமைச்சகம் அனைத்து பாதுகாப்பு முகமைகளுக்குக் கடிதம் மூலம் இந்த எச்சரிக்கையை அனுப்பியுள்ளது. அதாவது பல்வேறு சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் உயர்பதவியில் இருப்போருக்கு எதிராக அவதூறான, மோசமான கருத்துக்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் கண்காணிக்கவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிமனிதர்கள் சிலர் குடியுரசு தினத்தை சீர்குலைக்கும் நோக்கிலும், பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடும் என்பது குறித்து இந்த மாத தொடக்கத்திலேயே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து, தகவல்களைப் பரிமாறி இருந்தது.
இதுகுறித்து உள்துறையின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், " குடியரசு தினம் வருவதையொட்டி தீவிரவாத தாக்குதல்களும் நடக்க வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்து இருப்பதால், அதுபோன்ற எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தவிர்க்கும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முறை ஒவ்வொரு தகவல்களையும் விட்டுவிடாமல் கூடுதல் கவனத்துடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த முறை அதிகமான எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம்" எனத் தெரிவித்தார்
குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை நாடுமுழுவதும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால் அதற்கு எதிராகப் போராட்டங்களும் வலுத்து வருகின்றன. இதன் காரணமாகவே இந்த முறை கூடுதல் எச்சரிக்கைகள் உளவுத்துறையிடம் இருந்து விடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், " இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தபின் சமூக ஊடகங்களில் ஒருவிதமான பதற்றம் நிலவுகிறது. பலஇடங்களில் இன்னும் போராட்டம் நீடித்து வருவதால் அச்சுறுத்தல் விஷயத்தைச் சாதாரணமாக எண்ணி ஒதுக்கிவிட முடியாது" எனத் தெரிவித்தார்
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கி இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இதற்குப் பழிவாங்கும் நோக்கில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சதிச்செயலில் ஈடுபடலாம் என்று மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக இதற்கு முந்தைய ஆண்டுகளில் டெல்லி்யில் குடியுரசு தினத்தன்று நிகழ்ச்சிகள் நடக்கும் போது இருந்த பாதுகாப்பைக் காட்டிலும் இந்த முறை கூடுதல் படைகளைப் பாதுகாப்பில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்கும் வகையில் துணை ராணுவப்படை, போலீஸார் ஆகியோர் கூடுதலாக ஈடுபடுத்தப்படுகின்றனர்
இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், " குடியரசு தினத்தன்று அணிவகுப்பு நடக்கும் ராஜ்பாத்தில் உள்ள 3 கிமீ தொலைவுக்கு 3 ஆயிரம் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட உள்ளார்கள். ஒட்டுமொத்தமாக 7 ஆயிரம் வீரர்கள் குடியரசு தின நிகழ்ச்சிக்கு மட்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். எல்லைப்பகுதிகளிலும் கூடுதல் விழிப்புணர்வுடன் வைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்