ராகுல் காந்தியை ஒரு முறை சிவனாகக் காட்டிய உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஹசீப் அகமது, தனது குடியுரிமைக்கான ஆதாரத்தை அளிக்குமாறு இறந்துவிட்ட முன்னோர்களிடம் வேண்டுகோள் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதனை ஆதரித்தும் பாஜகவினர் ஆங்காங்கே கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இன்று பிரயாக்ராஜில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது காங்கிரஸ் பிரமுகர் ஹசீப் அகமது அருகில் உள்ள மயானதுக்குச் சென்று இறந்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
“நான் இந்த நாட்டின் குடிமகன் என்பதற்கு எனது முன்னோர்கள் சாட்சியமளிக்க வேண்டும் என்று எனது முன்னோர்களிடமும், எனது சமூகத்தைச் சேர்ந்த மற்ற இளைஞர்களிடமும் பிரார்த்தனை செய்ய வந்திருக்கிறேன்.
அவர்களால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், எனது மூதாதையர்களின் கல்லறைகளையும் எனது குடும்பத்தினருடன் சேர்த்து தடுப்பு முகாம்களில் வைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரார்த்தனை செய்கிறேன். ஏனென்றால் நான் இந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களும் என்னிடம் இல்லை" என்று அவர் கூறினார் .
மயானத்துக்குச் சென்று ஹசீப் அகமது வேண்டுகோள் விடுக்கும் முழு சம்பவமும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தற்போது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
ஹசீப் அகமது ஏற்கெனவே ராகுல் காந்தியை சிவனாக சித்தரித்துக் காட்டியதோடு சோனியா காந்தியை ஜான்சி ராணியாகவும் மாற்றிக் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது மயானத்திற்குச் சென்று குடியுரிமைக்கு ஆதாரம் கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.