கோரேகான் பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே தனது மகன் அமித் தாக்கரேவை அறிமுகம் செய்த காட்சி : படம் ஏஎன்ஐ 
இந்தியா

தாக்கரே குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசு: மகனை அரசியலில் அறிமுகம் செய்த ராஜ் தாக்கரே

ஐஏஎன்எஸ்

தாக்கரே குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசாக, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, முறைப்படி தனது மகனை அரசியலில் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

ஏற்கெனவே சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யா தாக்கரேவை சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் நேரடி அரசியல் களத்தில் இறக்கி எம்எல்ஏவாக்கினார். உத்தவ் தாக்கரேவும் அரசியலில் இறங்கி முதல்வராகி உள்ளார்.

பால் தாக்கரே உயிரோடு இருந்தவரை தாக்கரே குடும்பத்தில் இருந்து ஒருவரும் நேரடி அரசியல் களத்தில் இறங்கியதில்லை என்ற சூழலில் முதன் முதலாக ஆதித்யா தாக்கரே களமிறக்கப்பட்டார்.

ஆனால், நேரடித் தேர்தல் களத்துக்கு விருப்பப்பட்டுதான் பால் தாக்கரேவின் சகோதரி மகன் ராஜ்தாக்கரே சிவசேனாவில் இருந்து 2006-ம் ஆண்டு பிரிந்து மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா எனும் கட்சியைத் தொடங்கினார். இந்த சூழலில் ராஜ் தாக்கரேவும் தனது 27-வயது மகனை இன்று முறைப்படி அரசியலில் அறிமுகப்படுத்தினார்.

மறைந்த பால் தாக்கரேவின் 94-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ராஜ் தாக்கரே தனது மகனை அரசியலில் களமிறக்கியுள்ளார்.

இதற்காக மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள என்எஸ்இ மைதானத்தில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக ஏறக்குறைய நவநிர்மான் சேனா தொண்டர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தார்கள்.

ராஜ் தாக்கரே தனது மகன் அமித் தாக்கரேவை மேடையில் அறிமுகம் செய்தவுடன், அவர் பணிவுடன் வந்து தனக்கு வழங்கப்பட்ட வாளைப் பெற்றுக்கொண்டார்.

அப்போது அமித் தாக்கரே பேசுகையில், " கடந்த 14 ஆண்டுகளில் பொதுமக்கள் மத்தியில் நான் பேசும் முதல் பேச்சு இதுதான். நான் உண்மையில் மிகுந்த பெருமை கொள்கிறேன். ராஜ்தாக்கரேவின் வழிகாட்டல், ஊக்கம் இல்லாமல் என்னால் இந்த அளவுக்குச் செயல்பட முடியாது" எனத் தெரிவித்தார்.

ராஜ் தாக்கரே அவரின் மனைவி ஷர்மிளா தாக்கரே, அமித் தாக்கரேவின் மனைவி போருடே தாக்கரே, ராஜ் தாக்கரேவின் தாயார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் ராஜ் தாக்கரே தனது கட்சியின் புதிய கொடியையும் அறிமுகப்படுத்தினார். அந்தக் கொடி முற்றிலும் காவி நிறத்தில் இருந்தது. முன்பு இருந்த காவி நிறம், நீலம், பச்சை வண்ணங்களுக்குப் பதிலாகக் காவி நிறத்திலும் சிவாஜியின் ராஜ முத்திரை சின்னமும் பொறிக்கப்பட்டு இருந்தது.

SCROLL FOR NEXT