இந்தியா

''சட்டரீதியாகச் சந்திப்பேன்'' - மோசடிப் புகார் குறித்து முகமது அசாருதீன் கருத்து

ஏஎன்ஐ

பயண முகவர் ஒருவரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி எந்தவிதமான மோசடியிலும் ஈடுபடவில்லை என அசாருதீன் மறுத்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர். தற்போது அசாருதீன் ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

தன்னிடம் ரூ.20 லட்சத்துக்கு மேல் மோசடி செய்ததாக முகமது அசாருதீன் உட்பட மூன்று பேர் மீது அவுரங்கபாத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில், டிராவல் ஏஜென்ட்டாக இயங்கிவரும் முகமது சதாப் என்பவர் புகார் அளித்துள்ளார். சதாப் அளித்த புகார் மீது அவுரங்கபாத் காவல் நிலையம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

அவுரங்காபாத்தில் வசித்து வரும் அசாருதீனின் தனிப்பட்ட உதவியாளர் முஜீப், அதே ஊரிலுள்ள சதாப்பின் பயண நிறுவனத்துடன் நல்ல நட்பைக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், அசாருதீனின் தனிப்பட்ட உதவியாளர் முஜீப் என்பவர் மீது குற்றம் சாட்டியுள்ள பயண முகர் சதாப் முகமது, ''முஜீப் தன்னிடம் சில விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யச் சொன்னார், ஆனால் அந்தத் தொகையை செலுத்தவில்லை'' என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 406, 420 மற்றும் 34 ன் கீழ் தற்போது முகமது அசாருதீன் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மோசடி குறித்து அசாருதீன் மறுப்பு

எனினும் அப்படி எந்தவிதமான மோசடியிலும் தான் ஈடுபடவில்லை என முகமது அசாருதீன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

முகமது அசாருதீன் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்துக் கூறுகையில், ''அவுரங்காபாத்தில் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொய்யான எஃப்.ஐ.ஆரை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அப்படி எந்தவிதமான மோசடியிலும் நான் ஈடுபடவில்லை. இது சம்பந்தமாக நான் எனது சட்ட ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து வருகிறேன். மேலும் இதன் மீது அவசியம் நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.

SCROLL FOR NEXT