குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தின்போது பெண் ஆயுர்வேத டாக்டரை ஒரு கும்பல் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு , கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு போராடி வருகின்றனர். நாங்கள் முதலில் இந்தியர்கள். அதன் பின்னரே முஸ்லிம்கள் என்று அவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டக் களத்தில் உள்ள ஒரு முஸ்லிம் பெரியவரை வீடியோ எடுக்க முயன்ற ஆயுர்வேத பெண் டாக்டர் ஒருவரை ஒரு கும்பல் தாக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் பெரியவர் ஒருவரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் தீபா சர்மா என்பவர் பேட்டி எடுக்க முயன்றார். அப்போது ஒரு கும்பல், அவரை சூழ்ந்துகொண்டு செல்போன், கைப்பை ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு மிரட்டல் விடுத்துள்ளது.
இதுகுறித்து தீபா சர்மா கூறும்போது, “எனக்கு மிரட்டல் விடுத்த கும்பலில் இருந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள். அந்த முஸ்லிம் பெரியவரை வீடியோ எடுக்க மட்டுமே முயன்றேன். நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேட்டேன். அவரிடம் வீடியோ எடுப்பதற்கு அனுமதியும் பெற்றேன். அப்போது அந்த பெரியவர் கூறும்போது, எங்களிடம் ஆவணங்களைக் கேட்கிறார்கள். நாங்கள் இந்த நாட்டை விட்டே விரட்டப்படுவோம் என்று அஞ்சுகிறேன்” என்று எந்தப் பெரியவர் சொன்னார். அப்போது இந்த சட்டமானது, இந்திய முஸ்லிம்களுக்கோ, இந்துக்களுக்கோ எதிரானது அல்ல என்று நான் அவரிடம் எடுத்துரைத்தேன்.
ஆனால் அவர் அதைப் புரிந்துகொள்ளவில்லை. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. என்னை சூழ்ந்துகொண்ட ஒரு கும்பல் என்னிடமிருந்து செல்போன், கைப்பையை பறித்துகொண்டனர். சுமார் 30 பேர் என்னைச் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றனர். நான் உதவி கேட்டு கத்தினேன். ஆனால் யாருமே உதவிக்கு வரவில்லை. அங்கிருந்து தப்பியோடினேன். என்னை அவர்கள் விரட்டினார்கள். பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறினேன். அப்போது என்னைச் சூழ்ந்த அந்த கும்பல், செல்போனிலுள்ள வீடியோவை அழித்தால்தான் வீட்டுக்குப் போகமுடியும் என்று மிரட்டினர். அந்த வீடியோவை டெலிட் செய்த பின்னரே என்னை அங்கிருந்து போகவிட்டனர்.போலீஸில் புகார் செய்ய எனக்கு பயமாக உள்ளதுு” என் றார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு தீபா சர்மா பேட்டியும் அளித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இந்நிலையில் ஷாஹீன் பாகில் நடைபெற்று வரும் போராட்டம் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் போன்றது என்று மூத்த பாஜக தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான விஜய் கோயல் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “ஷாஹீன் பாகில் நடைபெற்று வரும் போராட்டம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக உள்ளது. மக்களை திசைதிருப்பவே இந்தப் போராட்டத்தை சிலர் நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டத்தால் ஷாஹீன் பாக் பகுதியை சுற்றியுள்ள பண்டரபுர், காலிண்டி கஞ்ச் பகுதிகளில் இருந்து யாரும் நொய்டாவுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கும் வகையில் அவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சாலைகளை மறித்து அவர்கள் நடத்தும் போராட்டத்தால் அலுவலகம், பள்ளிக்குச் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. இதை மனதில் கொண்டு போராட்டத்தை தடுக்க போலீஸார் முன்வரவேண்டும்” என்றார்.
அனில் பைஜால் சந்திப்பு
இதனிடையே போராட்டத்தைக் கைவிடுமாறு ஷாஹீன் பாகில் கூடியுள்ள போராட்டக்காரர்களைச் சந்தித்த டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேற்று கேட்டுக்கொண்டார்.