வரும் 27-ம் தேதி முதல் மும்பை நகரில் அனைத்து கடைகளும், ஷாப்பிங் மால்களும், தியேட்டர்களும் திறந்திருக்கும், 24 மணிநேரமும் இயங்கும் நகரமாக மாறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே அறிவித்துள்ளார்.
மும்பை நகரம் 24 மணிநேரமும் செயல்பட அனுமதிக்கும் முடிவுக்கு மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே மும்பையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
லண்டன் மாநகரின் இரவுநேர பொருளாதாரத்தின் மதிப்பு 500 கோடி பவுண்டுகள். அதேபோன்று மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் மும்பை மாநகரமும் 24 மணிநேரம் இயங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி வரும் 27-ம் தேதி முதல் மும்பை நகரம் 24 மணிநேரமும் இயங்கும். இந்த உத்தரவால் கூடுதலாக 5 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இந்த உத்தரவால் இரவு நேரத்தில் அனைத்து கடைகளும், ஷாப்பிங் மால்களும், ஹோட்டல்களும் கண்டிப்பாக திறந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இரவுநேரத்தில் கடைகளை திறந்து வர்த்தகம் செய்தால் லாபகரமாக இருக்கும் யார் நினைக்கிறார்களோ அவர்கள் தாராளமாக வர்த்தகம் செய்யலாம். அதற்கு தடைஏதும் இல்லை. முதல்கட்டமாக கடைகள், ஹோட்டல்கள், மால்களில் உள்ள தியேட்டர்கள், குடியிருப்பு பகுதிகளில் இல்லாத மில்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
என்சிபிஏ அருகே இருக்கும் பாந்த்ரா குர்லா காம்ப்ளஸ், நாரிமன் பாயின்ட் ஆகிவற்றில் உணவகங்கள் தொடர்ந்து திறந்திருக்க அனுமதிக்கப்படும். உணவு தரமானதாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் திடக்கழிவு மேலான்மையில் விதிமுறைகள் மீறுதல், சட்டம் ஒழுங்கில் பிரச்சினை ஏற்படுத்துதல் போன்றவற்றை செய்தால், வாழ்நாள் முழுவதும் அந்த கடைக்கு தடை விதிக்கப்படும்.
இரவு 1.30 மணிக்கு மேல் கடைகளை மூட வேண்டும் என்று போலீஸார் 27-ம் தேதிக்குப்பின் தொந்தரவு செய்யமாட்டார்கள். அவர்களின் கடமை என்பது கடைகள் குறிப்பிட்ட நேரத்துக்குப்பின் மூடப்பட வேண்டும் என்பது மட்டுமே.இனிமேல் போலீஸார் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையிலும் மட்டுமே கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இதன்படி 27-ம் தேதிக்கு மேல் மக்கள் இரவு நேரத்தில்கூட தியேட்டருக்குச் செல்லலாம், உணவு சாப்பிடலாம், ஷாப்பிங் செல்லலாம். சுற்றுலாப்பயணிகள் கூட இரவு நேரத்தில் எங்கு வேண்டுமானும் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
எங்கள் அரசின் இந்த முயற்சி குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சித்தாலும் பரவாயில்லை. மகாராஷ்டிரா விகாஸ் அகாதி அரசு மக்களின் ஆசைகளை நிறைவேற்றவே பணியாற்றுகிறது
இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்