மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்களின் ரகசியம் காக்கப்படும் என்று இந்திய தலைமை பதிவாளர், மக்கள் தொகை ஆணையர் அலுவலகம் (ஆர்ஜிஐ) உறுதி அளித்துள்ளது.
வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிப்பு பணியும் வரும் 2021 பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளன. தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியை நடத்த மாட் டோம் என்று கேரளா அறிவித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடத்தும் மேற்குவங்கம், காங்கிரஸ் ஆட்சி நடத்தும் பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களும் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஆர்ஜிஐ அலுவலகம் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பு மொபைல் ஆப் மூலம் நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பின்போது மக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் ரகசியம் காக்கப்படும். இதை மீறும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் சட்டவிதிகளின்படி தண்டிக்கப்படுவார்கள்.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ரூ.8,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் அரசு ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி உலகின் மிகப்பெரிய கணக்கெடுப்பு பணியாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிப்பு பணி தொடர்பான அறிவிக்கையை பெரும்பாலான மாநிலங்கள் வெளியிட்டுள்ளன. கடந்த 2010-ம் ஆண்டில் ஏற்கெனவே தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிப்பு பணி நடத்தப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டில் இந்த பதிவேடு புதுப்பிக்கப்பட்டது. அப்போது ஆதார், மொபைல் போன் எண்கள் சேகரிக்கப்பட்டன. தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிப்பு பணி நடத்தப் படுகிறது.
இந்த முறை ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றின் தகவல்களும் சேகரிக்கப்படும். ஒவ்வொரு குடி மகனும் கண்டிப்பாக தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.
அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தை தவிர்த்து இதர மாநிலங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிப்பு பணி நடத்தப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.