டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி : கோப்புப்படம் 
இந்தியா

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: நிதிஷ், ராம்விலாஸ் கட்சியுடன் முறைப்படி பாஜக கூட்டணி: அகாலிதளம், ஜேஜேபி விலகல்

பிடிஐ

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடனும், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியுடன் பாஜக முறைப்படி கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது.

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் பாஜகவும், 2 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளமும், ஒரு தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சியும் போட்டியிடுகின்றன. டெல்லியில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், சின்னம் ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான சிரோன்மணி அகாலி தளம், ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளன.

இதில் ஹரியாணா மாநிலத்தில் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து துணை முதல்வராக இருக்கும் ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவரும் துணை முதல்வருமான துஷ்யந்த் சவுதாலா, கூறுகையில், " சி்ன்னம் தேர்தலில் மிகவும் முக்கியமானது.எங்களின் சின்னமான சாவி, செருப்பு போன்றவை மற்றவர்களுக்கு ஒதுக்கினால் அந்த தேர்தலில் போட்டியிடமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட உள்ளன.

ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா : படம் ஏஎன்ஐ

இந்த கூட்டணி தேர்தலில் புதிய உற்சாகத்தை அளிக்கும். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை பிஹாரில் வலுவாக இருப்பவை. இங்குள்ள மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி பாஜகவுக்கு ஆதரவு திரட்டும்.

ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் சைலேந்திர குமார் புராரி தொகுதியிலும், சங்கம் விஹார் தொகுதியில் குப்தாவும் போட்டியிடுகின்றனர்.

லோக் ஜனசக்தியின் சார்பில் சீமாபூரி தொகுதியில் சாந்த்லால் சவாரியா போட்டியிடுகிறார். இரு கட்சிகளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்றன. தேர்தல் பிரச்சாரத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் ஈடுபடுகின்றனர். இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். புதிய நம்பிக்கையைத் தொண்டர்களுக்கு அளிக்கும்.

இவ்வாறு மனோஜ் திவாரி தெரிவித்தார்

SCROLL FOR NEXT