பாகிஸ்தான், வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் மக்கள் தொகை குறைந்தது எப்படி என்பது குறித்து குடியுரிமைச் சட்ட எதிர்பாளர்கள் விளக்கம் அளிக்கத் தயாரா என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறது.
கேரளாவை தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலமும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதேசமயம் பாஜக சார்பில் ஆதரவு பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:
‘‘சுதந்திரமடைந்தபோது நாடு பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவானபோது, அங்கு இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், ஜெயின் சமயத்தவர்கள் 23 சதவீதம் என்ற அளவில் இருந்தனர். அதேபோல் அப்போதைய வங்கதேச பகுதியில் 30 சதவீதம் இருந்தனர்.
ஆனால் தற்போது பாகிஸ்தானில் 3 சதவீதமும், வங்கதேசத்தில் 7 சதவீதமும் மட்டுமே வசிக்கின்றனர். அவர்கள் எங்கு போனார்கள். எப்படி இஸ்லாமியர்கள் அல்லாதோரின் மக்களின் தொகை அந்த நாடுகளில் கடும் வீழ்ச்சியடைந்தது. குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் இதற்கு பதில் சொல்ல தயாரா’’ என பேசினார்.