மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் அமைதியாக முடிந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று வழக்கமான பூஜைகள் முடிந்து நடை சாத்தப்பட்டது.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெற்றன. மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்று முடிந்தது. அதன்பின் அன்று இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த 15-ம் தேதி மகர ஜோதி தரிசனத்துக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பினர்.
மகர ஜோதி தரிசனம் முடிந்த நிலையில் நேற்று மாலை வரை பக்தர்கள் சன்னிதானம் வந்து ஐயப்பனை வழிபட கோயில் நிர்வாகத்தினர் அனுமதித்தனர்.
இந்நிலையில், 2 மாதத்துக்கும் மேலான மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்த நிலையில், இன்று பாரம்பரிய பூஜைகள், ஹோமங்களுடன் நடை சாத்தப்பட்டது. மகரவிளக்கு பூஜையின் கடைசி நாள் இன்று என்பதால், ஐயப்பனைத் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
கோயில் நடை சாத்தப்படுவதற்கு முன்பாக, அஷ்ட திரவிய மகாகணபதி ஹோமம், ஐயப்பனுக்கு அபிஷேகம், உஷா நைவேத்தியம் ஆகியவற்றை தலைமைத் தந்திரி மகேஷ் மோகனரரு அதிகாலையில் செய்து முடித்தார்.
மேலும், கோயில் நடை சாத்தப்படும் முன்பாக, ஐயப்பனைத் தரிசிக்க பந்தள மகாராஜா குடும்பத்திலிருந்து குடும்ப உறுப்பினர்கள் வந்திருந்து தரிசனம் செய்தனர். பூஜைகள் முடிந்த நிலையில் மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பனுக்கு அணிவிக்க வழங்கிய ஆபரணங்களை பெற்றுக்கொள்ள பந்தல மகாராஜா குடும்பத்தினர் வந்திருந்தனர்.
மேல்சாந்தி ஏ.கே.சுதீர் நம்பூதரி மூலவர் ஐயப்பனுக்கு திருநீறு அபிஷேகம் செய்து, ஹரிவராசனம் பாடி கோயில் நடையைச் சாத்தினார். இதையடுத்து, வரும் பிப்ரவரி 13-ம் தேதி மாதப்பிறப்பு பூஜைக்காக 5 நாட்களுக்குச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்