இந்தியா

யாகூப் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சிலர் தீவிரவாதிகள்: திரிபுரா ஆளுநர் கருத்தால் சர்ச்சை

பிடிஐ

தூக்கிலிடப்பட்ட, மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என திரிபுரா ஆளுநர் ததகட்டா ராய் தெரிவித்துள்ள கருத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

யாகூப் மேமனின் இறுதிச் சடங்கில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதுதொடர்பாக தனது ட்விட்டர் தளத்தில் “இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் அனைவர் மீதும் (உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் தவிர) உளவுத் துறையினர் கண்காணிப்பைத் தொடர வேண்டும். அவர்களில் பலர் தீவிரவாதிகள்” என பதிவு செய்திருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு குறித்தே கவலை கொள்வதாக அவர் விளக்கமளித்தார். இதுதொடர்பான மற்றொரு ட்விட்டர் பதிவில், “மாநிலத்தின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட வேண்டியது ஆளுநரின் பொறுப்பு. தீவிரவாதத்தைத் தடுக்க யாகூப் பின் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை உளவுத் துறை கண்காணிக்க வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது” என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், “ நான் உளவுத்துறை கண்காணிப்பை தொடர வேண்டும் என்றுதான் கூறினேன். எந்தவொரு சமூகத்தையும் குறிப்பிடவில்லை. எனவே என்னை மத சகிப்புத்தன்மையற்றவர் என எப்படிக் குற்றம்சாட்ட முடியும்” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

“ஆளுநராக எனது பணி, சமரசம் செய்து கொள்வதல்ல. நான் சொல்லாத கருத்தையும், குறிப்பிட்ட சமூகத்தை தாக்குவதாக சிலர் கண்டுபிடித்துச் சொல்கின்றனர். பொதுநல விவகாரத்தை, பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவருவது எனது பணி” என அடுத்தடுத்த ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.

ததகட்டா ராய் கடந்த மே மாதம் திரிபுரா ஆளுநராகப் பொறுப்பேற்றார். இவர் 2002-2006-ம் ஆண்டுகளில் மேற்கு வங்க பாஜக மாநில தலைவராக பொறுப்பு வகித்தார்.

SCROLL FOR NEXT