பிஹார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் காப்பகம் ஒன்றில் பல சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் பிஹார் மக்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பிரிஜேஷ் தாக்கூர் உள்பட 19 பேர் குற்றவாளிகள் என டெல்லி விசாரணை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
குற்றவாளிகளில் 19 பேரில் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை விவரங்கள் வரும் 28-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக கூடுதல் அமர்வு நீதிபதி சவுரவ் குல்ஸ்ரேஸ்தா அறிவித்தார்.
பிஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் அரசு நிதியுதவியுடன் கூடிய ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்தக் காப்பகத்தை பிஹார் மக்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பிரிஜேஷ் தாக்கூர் என்பவர் நடத்தி வந்தார்.
காப்பகத்தில் தங்கியிருந்த 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த டாடா இன்ஸ்ட்டியூட் ஆப் சோஸியல் சயன்ஸ் நிறுவனம் சிறுமிகள் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளார்கள் எனக் கண்டுபிடித்தது.
இந்தக் காப்பகத்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக கடந்த 2018-ம் ஆண்டு மே 26-ம் தேதி பிஹார் அரசுக்கு அறிக்கை அளித்தது. அதன்பின் மே 29-ம் தேதி அந்த சிறுமிகள் அனைவரும் அரசு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர்.
இது தொடர்பாக காப்பகத்தில் பணிபுரிந்தோர், பிஹார் சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை பிஹார் முசாபர்பூர் போக்ஸோ நீதிமன்றத்தில் இருந்து டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றத்துக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக டெல்லி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இதில் பாலியல் பலாத்காரம், சதித்திட்டம், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு ஆகியவையும் போக்ஸோ சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அதன்பின் இந்த வழக்கில் நீதிபதி சவுரவ் குல்ஸ்ரேஸ்தா இன்று தீர்ப்பளித்தார். அவர் அளித்த தீர்ப்பில் காப்பகத்தின் உரிமையாளர் பிரிஜேஷ் தாக்கூர் உள்ளிட்ட 19 பேர் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்தார். ஒருவரை மட்டும் நீதிபதி விடுவித்தார்.
பலாத்காரம், கூட்டுப் பலாத்காரம், பாலியல் தொந்தரவு ஆகிய பிரிவுகளின் கீழ் பிரிஜேஷ் தாக்கூர் மீது தொடரப்பட்ட குற்றச்சாட்டை உறுதி செய்து குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 28-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி சவுரவ் குல்ஸ்ரேஸ்தா அறிவித்தார்.