கோப்புப் படம் 
இந்தியா

அமித் ஷாவுக்கு பதில் பாஜக தலைவராகும் ஜே.பி.நட்டா: பிற்பகலில் அறிவிப்பு வெளியாகிறது

செய்திப்பிரிவு

பாஜகவின் புதிய தலைவராக செயல் தலைவர் ஜே.பி. நட்டா இன்று பிற்பகல் தேர்வு செய்யப்படுகிறார்.

பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறை பின்பற்றப்பட்டு வருவதால், அமித் ஷா மத்திய அமைச்சர் பதவி ஏற்ற நிலையில், கட்சியின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். இதனால் விரைவில் பாஜக புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்தநிலையில் பாஜக கட்சியின் அமைப்புத் தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து தேசியத் தலைவர் தேர்தலும் நடைபெறவுள்ளது. டெல்லியில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஜே.பி நட்டா பாஜக தலைவராக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி இன்று (20-ம் தேதி) தேசியத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகின. ஜே.பி. நட்டா தலைவர் என ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை என்றும், ஏகமனதாக அவர் தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கு ஏதுவாக பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜக நிர்வாகிகள் ஜே.பி. நட்டாவின் பெயரை பரிந்துரை செய்து முன்மொழிகின்றனர். மத்திய அமைச்சர்களும் அவரது பெயரை பரிந்துரை செய்கின்றனர்.

தலைவர் பதவிக்கு ஒரு பெயர் மட்டுமே பரிந்துரை செய்யப்படும் என்பதால் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் ஜே.பி.நட்டா ஏகமனதாக தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்.

எனவே அவர் தலைவராக தேர்வாவது பற்றிய அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது.

SCROLL FOR NEXT