பாஜகவின் புதிய தலைவராக செயல் தலைவர் ஜே.பி. நட்டா நாளை தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறை பின்பற்றப்பட்டு வருவதால், அமித் ஷா மத்திய அமைச்சர் பதவி ஏற்ற நிலையில், கட்சியின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். இதனால் விரைவில் பாஜக புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்தநிலையில் பாஜக கட்சியின் அமைப்புத் தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து தேசியத் தலைவர் தேர்தலும் நடைபெறவுள்ளது. டெல்லியில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஜே.பி நட்டா பாஜக தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து நாளை (20-ம் தேதி) தேசியத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜே.பி. நட்டா தலைவர் என ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை என்றும், ஏகமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக மத்திய அமைச்சர்கள் அனைவரையும் பாஜக தலைமை அலுவலகத்துக்கு நாளை காலை வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய நிர்வாகிகளும் கலந்து கொள்ளும் கூட்டத்தில் ஜே.பி.நட்டா ஏகமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. வேறு யாரும் போட்டியிடாத சூழலில் அவர் தலைவராக தேர்வாவது பற்றிய அறிவிப்பு நாளையே வெளியிடப்படலாம் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜே.பி.நட்டா கடந்து வந்த பாதை
கடந்த மோடி அரசியல் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக இருந்த நட்டா இந்த முறை அமைச்சரவையில் இல்லை.
இமாச்சலப்பிரதேசத்தின் பிறந்த ஜே.டி நட்டா, பாஜக மூத்த தலைவர்களின் அன்பையும், மரியாதையையும், நம்பிக்கையையும் பெற்றவர். குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம்பிக்கையை ஜே.பி.நட்டா பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
56வயதான ஜே.பி. நட்டா இமாச்சலப்பிரதேச பாஜக அரசிலும் அமைச்சராவக இருந்தவர், கட்சியின் ஆட்சிமன்றக் குழுவிலும் உறுப்பினராக இருந்து வருகிறார். எந்தவிதமான விமர்சனத்துக்கும் உள்ளாகாதவர் என்பதால் தலைவர் பதவிக்கு நட்டா தேர்வு செய்யப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.