மேற்குவங்கத்தில் நிச்சயமாக அடுத்த மாநில அரசை பாஜக தான் அமைக்கும். அப்போது ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேசத்து ஊடுருவல்காரர்களை வெளியேற்றியே தீருவோம் என அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் பேசினார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. 24 பர்கானா மாவட்டத்தில் நடந்த பேரணியில் மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கலந்து கொண்டு பேசியதாவது:
‘‘மேற்குவங்க மாநிலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச முஸ்லிம்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். அவர்களுக்கு மம்தா பானர்ஜி அரசு 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி கொடுத்து வருகிறது. ஆனால் நாங்கள் அவர்களை மேற்குவங்க மாநிலத்தில் இருந்து அவர்களது நாடான வங்கதேசத்துக்கு திருப்பியனுப்புவோம்.
சட்டவிரோத குடியேறிகளான அவர்கள் மேற்குவங்கத்தில் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள். குடியுரிமைச் சட்டத்தை மத ரீதியாக அணுகுபவர்கள் வங்கதேசத்தில் இருந்து மத வன்முறையால் வெளியேற்றப்பட்டு அகதிகளாக உள்ள இந்துக்களை பற்றி ஏன் கவலைப்படுவதில்லை. குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள், மேற்குவங்கத்துக்கு எதிரானவர்கள். அவர்கள் விருப்பும் நிறைவேற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
ஊடுருவல்கார்களுக்காக மேற்குவங்கத்தில் சில அறிவு ஜீவிகளின் உள்ளத்தில் ரத்தும் கசிகிறது. அவர்களது கருணை எப்படி பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் மனம் வங்கத்து இந்து அகதிகளுக்காக ஒருபோதும் இரங்காது. ஏனென்றால் பாதிக்கப்படுவது இந்துக்கள தானே. மேற்குவங்கத்தில் நிச்சயமாக அடுத்த மாநில அரசை பாஜக தான் அமைக்கும். அப்போது ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேசத்து ஊடுருவல்காரர்களை வெளியேற்றியே தீருவோம்’’ எனக் கூறினார்.