போராட்டத்தின் மூலமாக சிய குடிமக்கள் பதிவேடு நாடுமுழுவதும் அமல்படுத்தப்படாமல் தடுத்த நிறுத்த முடியும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசினார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டத்துக்கு கேரளா, மேற்குவங்கம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குறிப்பாக காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கலந்து கொண்டு பேசினார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
‘‘குடியுரிமைச் சட்டம் பற்றி பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்ன சமாதானம் சொன்னாலும் அவர்களது நோக்கம் தெளிவானது. தங்களுக்கு தேவையான நபர்களை அடையாளம் காண்பது தான் அவர்களது நோக்கம்.
கடுமையான போராட்டத்தின் எதிரொலியாக மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேடு நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட மாட்டாது என அவர்களை கூற வைக்க முடியும்.
இல்லையென்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு தொடர்பாக வீடு வீடாக தகவல்களை சேகரிக்கும்போதே உங்கள் தாய் தந்தையர் பிறந்த இடம் எது, அதற்கான ஆதாரம் உள்ளதா என கண்டிப்பாக கேட்பார்கள். அதற்கான நோக்கமும் தெளிவானது. போராட்டத்தால் மட்டுமே இதனை தடுத்து நிறுத்த முடியும்’’ எனக் கூறினார்.