இந்தியா

24 மணிநேரமும் தண்ணீர்; டெல்லியில் 300% காற்று மாசு குறைப்பு: ஆம் ஆத்மி அதிரடி தேர்தல் வாக்குறுதி

செய்திப்பிரிவு

24 மணிநேரமும் வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும், டெல்லியை அச்சுறுத்தி வரும் காற்று மாசை 300 சதவீதம் அளவுக்கு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி: பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில் ஆம் ஆத்மி சார்பில் தேர்தலையொட்டி பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய கியாரண்டி கார்டை முதல்வர் கேஜ்ரிவால் வெளியிட்டார். இது தேர்தல் அறிக்கையல்ல எனக் கூறிய அவர் இது உறுதி அளிக்கும் அறிவிப்பு எனக் கூறினார்.

அதில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகள் வருமாறு:

ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் 24 மணிநேரமும் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும் பேருந்துகளில் இலவச பேருந்து பாஸ் வழங்கப்படும்

டெல்லியை அச்சுறுத்தி வரும் காற்று மாசை 300 சதவீதம் அளவுக்கு குறைப்போம்.

அனைத்து குழந்தைகளுக்கும் உலகத் தரத்திலான கல்வி வழங்கப்படும்.

குடிசைப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.

யமுனை நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT