கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை மத்திய ஆயுதப்படை போலீஸார் விபத்துக்கள் மற்றும் தற்கொலையால் 2,200 பேர் இறந்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.
பிஎஸ்எப், சிஆர்பிஎப், சிஎஸ்ஐஎப், ஐடிபிபி, எஸ்எஸ்பி, அசாம் ரைபிள், என்எஸ்ஜி ஆகிய 5 படைகளை உள்ளடக்கிய மத்திய ஆயுதப்படை போலீஸார் என்று அழைக்கப்படுகிறது. இந்த 5 பிரிவுகளில் இருந்தும் கிடைக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் என்சிஆர்பி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முதன்முதலில் கடந்த 2014-ம் ஆண்டு என்சிஆர்பி அமைப்பு, மத்திய ஆயுதப்படையினர் குறித்த தகவலைச் சேகரித்து வெளியிட்டது. அப்போது, விபத்துக்கள் மூலம் 1,232 வீரர்களும், 175 வீரர்கள் தற்கொலை மூலம் உயிரிழந்தனர்.
கடந்த 2018-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், சிஏபிஎப் பிரிவில் 104 வீரர்கள் விபத்துக்கள் மூலமும், 28 வீரர்கள் தற்கொலை மூலம் உயிரிழந்தனர். மொத்தம் 2018-ம் ஆண்டில் 132 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் வீரர்களின் உயிரிழப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.
விபத்துக்கள் என்று கணக்கிடும்போது, கடந்த 2017-ம் ஆண்டில் 113 வீரர்களும், 2016-ம் ஆண்டில் 260 பேரும், 2015-ம் ஆண்டில் 193 பேரும் உயிரிழந்தனர்.
2017-ம் ஆண்டில் 60 வீரர்கள் தற்கொலை செய்து உயிரிழந்தனர், 2016-ம் ஆண்டில் 74 வீரர்களும், 2015-ம் ஆண்டில் 60 வீரர்களும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒட்டுமொத்தமாகக் கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டுவரை சிஏபிஎப் வீரர்கள் 1,902 பேர் விபத்துக்கள் மூலமும், 397 பேர் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த 5 படைப்பிரிவுகளும் எல்லைப்பாதுகாப்பு, மத்திய அரசுக்குச் சட்டம், ஒழுங்கில் துணை செய்வது, மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் உதவுவது, கலவரம், பதற்றமான சூழலில் பாதுகாப்பில் ஈடுபடுவது, சட்டவிரோத செயல்களைத் தடுத்தல் போன்றவற்றில் இந்த 5 பிரிவுகளும் ஈடுபடுகின்றனர்.
2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி சிஏபிஎப் அமைப்பில் மொத்தம் 9 லட்சத்து 29 ஆயிரத்து 289 வீரர்கள் உள்ளனர்.
வீரர்கள் இறப்பில் பெரும்பாலும் தீவிரவாத தாக்குதல், சதி முறியடிப்பு, என்கவுன்ட்டர் நடக்கும் போது உயிரிழந்துள்ளனர். இவற்றை விபத்துக்கள் என்ற அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் 31 சதவீதம் வீரர்கள் இதுபோன்ற வகையில் உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்துகள், ரயில் விபத்துக்கள் மூலம் 20 சதவீதம் பேரும், மற்ற இதர காரணங்கள் மூலம் 20 சதவீதம் பேரும் உயிரிழந்துள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்கையில் 35 சதவீதம் தற்கொலைகள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துள்ளனர். 18 சதவீதம் பேர் திருமணம் செய்து கொள்ளுதலில் ஏற்பட்ட பிரச்சினைகள், பணிமாறுதல் கிடைக்காமை போன்றவற்றால் தற்கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு என்சிஆர்பியில் தெரிவிக்கப்பட்டுள்ளது