காவல்துறை தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதற்காக, போல்நெட் 2.0-ஐ மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை அறிமுகம் செய்ய உள்ளார்.
போலீஸ் வயர்லெஸ் ஒருங்கிணைப்பு இயக்குநரகம் (டிசிபிடபிள்யூ) கடந்த 1946-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 1950-ம் ஆண்டு முதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. ரேடியோ தொலைத்தொடர்பு மூலம் மாநில மற்றும் மத்திய காவல் படை மற்றும் பாதுகாப்புப் படையினரை ஒருங்கிணைப்பதுதான் இந்த அமைப்பின் பணி.
குறிப்பாக சட்டம், ஒழுங்கு பிரச்சினை மற்றும் பேரிடர் காலங்களில் காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான வசதியை டிசிபிடபிள்யூ வழங்கி வருகிறது. இந்த சேவை ‘போல்நெட்’ என்ற பெயரில் கடந்த 2006 முதல் இயங்கி வருகிறது.
இந்நிலையில், ‘போல்நெட் 2.0’ என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம், இணையதள இணைப்புடன் கூடிய மல்டிமீடியா உதவியுடன் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பாதுகாப்புப் படையினர் காணொலி காட்சி மூலம் தகவலை பரிமாறிக்கொள்ள முடியும்.
மேலும் தொலைதூரங்களில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையினர் தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் பேசுவதற்கான வசதியும் இந்த போல்நெட் 2.0-ல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்டிஆர்எப், மத்திய, மாநில படைகள் உள்ளிட்ட பேரிடர் மீட்புக் குழு மற்றும் பாதுகாப்புப் படையினர் மட்டுமல்லாது, பேரிடர் காலங்களில் தீயணைப்புப் படை மற்றும் மருத்துவமனைகளையும் ஒரே தளத்தில் கொண்டுவர இந்த போல்நெட் 2.0 உதவும். இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியும். 260 தொலைதூர காவல் நிலையங்களையும் இது இணைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - பிடிஐ